ஈரோட்டில் முகக்கவசம் அணியாத 100 பேருக்கு அபராதம் :
ஈரோடு மாநகராட்சிப் பகுதியில்கரோனா பாதுகாப்பு வழிமுறை களைப் பின்பற்றாதவர் களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் நாள்தோறும் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன்படி, பவானி நகராட்சியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் சி.கதிரவன், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல் இருந்த பொதுமக்களுக்கு ரூ.200 அபராதமும், பேன்சி ஸ்டோர் மற்றும் நகைக்கடைகளுக்கு தலா ரூ.5000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். விதிமுறைகளை மீறிய கடைகள் மூடப்பட்டன.
இதே போல் ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் நேற்று காலை 7 மணி முதல் 10 மணி வரை நான்கு மண்டலங்களிலும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
இதில், விதிமுறைகளை மீறிய 6 கடைகளுக்கு தலா ரூ.5,000 வீதம் ரூ.30 ஆயிரம், முகக்கவசம் அணியாமல் வந்த 100 பேருக்கு தலா ரூ.200 வீதம் 20 ஆயிரம் என மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
