Published : 29 Apr 2021 03:13 AM
Last Updated : 29 Apr 2021 03:13 AM

காஞ்சிபுரத்தில் அதிகரிக்கும் கரோனா தொற்று - மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு :

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி.

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரிப்பால் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்தது அதிகரித்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில் அரசு தலைமை மருத்துவமனையில் ஆட்சியர் மகேஸ்வரி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அரசு தலைமை மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் தாய் மற்றும் குழந்தைகள் ஆரோக்கிய கட்டிட வளாகத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2,805 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 சதவீதத்தில் இருந்து 3.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு தொற்று உள்ளவர்கள் கண்டறியப்படுவதால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்று அறியப்பட்டவர்களின் தொற்றின் நிலைகளை வகைப்படுத்தி அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதால் இறப்பு விகிதம் பெருமளவு கட்டுப்பாட்டில் உள்ளது.

தற்போது அரசு மருத்துவமனையில் தேவையான அளவு திரவ ஆக்சிஜன் உள்ளது. இதை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவமனையில் கரோனா தொற்று பாதிப்புக்கு தற்போது 317 படுக்கை வசதி கொண்ட பிரிவுகள் உள்ளன. மேலும் 40 படுக்கை வசதி கொண்ட 2 புதிய மையங்கள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. தற்போது 163 பேர் ஆக்சிஜனை பயன்படுத்தி வருகின்றனர். 77 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் காலியாக உள்ளன. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கரோனா பராமரிப்பு மையங்களை உருவாக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றார்.

இந்த ஆய்வின்போது இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) ஜீவா, மாவட்ட வருவாய் அலுவலர் ரா.பன்னீர்செல்வம், உதவி செயற்பொறியாளர் (பொதுப்பணித் துறை) சிவசண்முகராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x