

விழுப்புரம் அருகே தனியார் பொறியியல் கல்லூரியில் ரூ. 1 கோடி கையாடல் செய்த கல்லூரி மேலாளர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மேலாளராக கடந்த 2010-ம்ஆண்டு முதல் புதுச்சேரி உருவையாறு பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (56) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 2018-2019,2020-2021 ஆகிய கல்வியாண்டுகளில் மாணவர்களிடம் கல்லூரிகட்டணத்தை ஆன்லைன் மூலமாக வசூலிக்காமல் பல மாணவர்களிடம் நேரடியாக பணத்தை பெற்றுள்ளார். பெற்ற பணத்தைகல்லூரி நிர்வாகத்திற்கு சொந்தமான வங்கி கணக்கில் செலுத்தவில்லை. கல்லூரிக்கு சொந்தமான வேறு சில வங்கி கணக்குகளில் பணம் செலுத்தியதாக வெறும் பதிவுகள் மட்டும் கணினியில் பதிவேற்றியுள்ளார்.
இந்நிலையில் 2019-ம் ஆண்டு முதல் 2021 வரை தணிக்கை செய்தபோது, ரூ.1 கோடியே 18 லட்சத்து 74 ஆயிரத்து 221-ஐ ராமமூர்த்தி கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக கல்லூரியின் தலைவர் ராஜா, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராமமூர்த்தியை கைது செய்தனர்.