

வேலூர் மாவட்டத்தில், கரோனா பாதிப்பு 26 ஆயிரத்தை கடந்துள் ளது. நேற்று ஒரே நாளில் 497 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்திலேயே மாநகராட்சி பகுதிகளில் கரோனா வேகமாக பரவி வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி போடுவதும், முகக் கவசம் அணிவதும், தனி மனித இடைவெளியை பின்பற்றி பாது காப்பு நடவடிக்கைகளை பொது மக்கள் மேற்கொண்டால் தான் கரோனா தொற்று பரவல் குறையும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியிருந்தாலும் குறைந்த அளவிலேயே தடுப்பூசி போடப்பட்டுள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலை யில், மே 1-ம் தேதி முதல் 18 வயது நிரம்பியவர்கள் அனை வருக்கும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு ஏற்பாடுகள் செய்து, அதற்கான முன்பதிவை நேற்று தொடங்கியது.
இந்நிலையில், வேலூர்மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொண்டுள் ளனர். தடுப்பூசியை இதுவரை போடாதவர்கள் யார் என்பதை கண்டறிய மாநகராட்சி ஊழியர்கள் கொண்ட தனிக்குழு ஒன்றை மாநகராட்சி ஆணையர் சங்கரன் ஏற்படுத்தியுள்ளார்.
இக்குழுவினர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று அங்கு 45 வயதுக்கு உட்பட்ட நபர்கள் யார் உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதா ? அதற்கான சான்றிதழ் அவர்களிடம் உள்ளதா ? என்பதை ஆய்வு செய்து, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் வீடுகளில் மாநகராட்சி சார்பில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை நேற்று தொடங்கினர். அதேபோல, தடுப்பூசி போடாதவர்களின் விவரங்களை சேகரித்து அந்த பட்டியல் சுகாதாரத்துறையினரிடம் வழங்க அக்குழுவினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.