

எடப்பாடி அருகே விசைத்தறிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், ஊழியர்களுக்கு வழங்க வைத்திருந்த சம்பளப் பணம் ரூ.6.80 லட்சம் எரிந்து சாம்பலானது.
சேலம் மாவட்டம் எடப்பாடி போடிநாயக்கன்பட்டி காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், சீனிவாசன், முத்தையன் உள்ளிட்டோருக்கு சொந்தமான விசைத்தறி ஜவுளி குடோன் உள்ளது.
குடோனில் நேற்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து அங்கு சென்ற எடப்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதில், குடோனில் இருந்த இயந்திரங்கள், ஜவுளி உற்பத்திப் பொருட்கள் மற்றும் அலுவலக அறையில் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வைத்திருந்த ரூ.6.80 லட்சம்ரொக்க பணம் உள்ளிட்டவைகள் எரிந்து சாம்பலானது.
இதுதொடர்பாக எடப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதல் கட்டவிசாரணையில் தெரியவந்தது.