

பண்ணாரி சோதனைச் சாவடி அருகே கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வேன் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், ஈரோடு மாவட்டம் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே 8 பேர் அடங்கிய நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து திம்பம் மலைப்பாதை வழியாக சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டிருந்த இரண்டு வேன்களை நிறுத்தி சோதனையிட்டனர்.
இதில், பருத்திக்கொட்டை மூட்டைகளின் நடுவே குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் வேனை ஓட்டி வந்த நபர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சல்மான் முகமது, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பதும் இவர்கள் கர்நாடக மாநிலம் கோழிபாளையத்திலிருந்து, திருச்சி மற்றும் புதுக்கோட்டைக்கு போதைப் பொருட்கள் கடத்தி செல்வதும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்த நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடத்தி வந்த இருவரையும் சத்தியமங்கலம் காவல் துறையிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.