Published : 27 Apr 2021 06:29 AM
Last Updated : 27 Apr 2021 06:29 AM

பல ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம் - மத்தள ஓடையில் 5 இடங்களில் தடுப்பணை கட்ட நடவடிக்கை :

உடுமலை

மத்தளஓடையில் ரூ.97 லட்சம் மதிப்பில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் விவசாயிகளின் பல ஆண்டுகால கனவு நனவாகிறது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த திருமூர்த்தி அணை 2.75 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. பரம்பிக்குளம் அணையில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. அதன் மூலம் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. 50 கி.மீ. தொலைவு பயணிக்கும் காண்டூர் கால்வாயின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பட்டா பூமி உள்ளது. அதில் ஏராளமான விவசாயிகள் வேளாண் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு, பிஏபி திட்டத்தின் கீழ் பாசனத்துக்காக தண்ணீர் வழங்கப்படுவதில்லை. ஆழ்குழாய் அல்லது கிணற்று பாசனத்தை நம்பியே சாகுபடி செய்ய வேண்டியுள்ளது.

காண்டூர் கால்வாயின் வலது கரை மேற்குத் தொடர்ச்சி மலை அருகே அமைந்துள்ளதால், மழைக் காலங்களில் மலைகளில் ஏற்படும் வெள்ளம், காண்டூர் கால்வாயை சேதப்படுத்தாமல் தடுக்க, கால்வாயின் அடிப்பகுதியில் பைபாஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட பைபாஸ்களில் ஒன்றான மத்தளஓடை வழியாக ஆண்டுதோறும் மழைக் காலங்களில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். இதனை தேக்கி வைக்க, தடுப்பணைகள் கட்டவேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகளின் பல ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வந்தது.

இந்நிலையில் வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.97 லட்சம் மதிப்பில் 5 இடங்களில் தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதல்கட்ட கட்டுமானப் பணிகள் நேற்று தொடங்கின. கரோனா பரவல் காரணமாக துறை அதிகாரிகள் யாருமின்றி விவசாயிகள் முன்னிலையில், ஓடையின் நடுவே முளைத்திருக்கும் முள் செடிகளை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது ‘‘மத்தளஓடையில் தடுப்பணை கட்ட 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கியுள்ளன. ஒவ்வொரு தடுப்பணையும் ஒன்றரை மீட்டர் உயரத்தில் கட்டப்படும். இதனால் சுமார் 1,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். விவசாயிகள் அடங்கிய குழுவினர் பணிகளை கண்காணித்து வருகின்றனர். தடுப்பணை கட்டப்பட்டால், வறண்டு காணப்படும் பொன்னாலம்மன்சோலை, இனி பசுஞ்சோலையாக மாறும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x