Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM
புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளது.
புதுச்சேரியில் கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்கள் முழு ஊரடங்கை தொடர்ந்து, திங்கள்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்படும் என ஆளுநர் தமிழிசை தெரிவித்திருந்தார். இந்த புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.
அதன்படி காலையில் 7 மணிமுதல் காய்கறி, மளிகை, துணிக்கடைகள் என அனைத்துவிதமான கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் பிரதான வணிக வீதிகளில் வழக்கம்போல் மக்கள் கூடினர்.மக்கள் கூடும் விழாக்கள், வழிபாட்டுத் தலங்கள், தேநீர் கடைகள் ஆகிய இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
கோயில்களில் பொது வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் அவை காலையிலிருந்தே மூடப்பட்டிருந்தன. பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெற்றன. இதேபோல் வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொது அரங்குகள், அழகு நிலையங்கள், சலூன்கள் திறக்கப்படவில்லை. திருமண விழாக்களில் 50 நபர்கள் மற்றும் இறுதி சடங்குகளில் 25 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.
உணவு விடுதிகள், தேநீர் கடைகள், மதுபானக் கடைகளில் பார்சல்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. உட்கார்ந்து சாப்பிட அனுமதியில்லை. ஆனால் சில கடைகளில் இந்த விதிகள்மீறப்பட்ட நிலையில் வியாபாரிகளை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்தனர்.
மேலும், புதுச்சேரியில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளகரோனா தடுப்பு விதிகளில் கூடுதலாக மளிகை மற்றும் காய்கறிகடைகள் உள்ளிட்ட இதர அனைத்துக் கடைகளிலும் வழிமுறைகளை தவறாமல் கடைபிடித்து வழக்கம்போல் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தது. இதை மீறியவர்கள் மீது காவல்துறை, நகராட்சி அதிகாரிகள் கண்காணித்து அபராதம் வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பேருந்துகள், ஆட்டோக்கள், கார்கள், இதர வாகனங்களும் வழக்கம் போல், காலை 5 மணி முதல் இயங்கின. தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கும், இங்கிருந்து தமிழகத்துக்கும் பேருந்துகள் வழக்கமான கூட்டத்துடன் வந்து சென்றன. இரண்டு நாள்முழு ஊடங்குக்கு பிறகு பேருந்துகள் இயங்கியதால், பெரும்பாலான பேருந்துகளில் விதிகளை மீறி பயணிகள் நின்றபடி அதிகளவில் சென்றனர். இதனால் பேருந்துகளில் நின்று பயணிக்க அனுமதி மறுத்ததோடு, பேருந்து ஓட்டுநர், நடத்துநரை காவல்துறையினர், போக்குவரத்து துறையினர் எச்சரித்தனர்.
திரையரங்குகள் மூடப்பட்டன. அதே வேளையில் அரசு துறைகள்செயல்பட்டன. 50 சதவீத பணியாளர்களே வரவழைக்கப்பட்டனர். பெட்ரோல் பங்குகள் வழக்கம்போல் திறந்திருந்தன. பிற்பகல் 2 மணிக்கு துணிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட பிறகடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பாலகங்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே இயங்கின. மாலை 5 மணிக்கு கடற்கரை சாலை, பாரதி பூங்கா போன்ற சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன.
அரசு செயலர் உத்தரவு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT