முழு ஊரடங்கால் செயல்படாத பின்னலாடை நிறுவனங்கள் : திருப்பூர் மாநகர், புறநகர் பகுதிகளில் கடைகள் அடைப்பு

முழு ஊரடங்கால் செயல்படாத பின்னலாடை நிறுவனங்கள் :  திருப்பூர் மாநகர், புறநகர் பகுதிகளில் கடைகள் அடைப்பு
Updated on
2 min read

முழு ஊரடங்கையொட்டி, திருப்பூர் மாநகர் மற்றும் புறநகரில் அனைத்துகடைகளும் நேற்று அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் 2-ம் அலை தீவிரமடைந்துள்ளதையடுத்து, கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வார நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று திருப்பூர் மாவட்டத்தில் காய்கறி மற்றும் மளிகைக் கடைகள், சந்தைகள், டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. அதிக வியாபாரம் நடைபெறும் இறைச்சி மற்றும் மீன் கடைகளும் திறக்கப்படவில்லை. வணிக நிறுவனங்கள், பல்பொருள் அங்காடிகள், வர்த்தக மையங்கள் உட்பட அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

கோயில்களில் ஏப்ரல் 26-ம் தேதிமுதல் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான கோயில்களில் பக்தர்கள் அனுதிக்கப்படவில்லை. மருந்து கடைகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள் (பார்சலுக்கு மட்டும்) குறிப்பிட்ட நேரத்தில் சில இடங்களில் திறக்கப்பட்டிருந்தன. இதனால், ஆன்லைனில் பதிவு செய்வோருக்கு உணவுகளை இருப்பிடத்துக்கு சென்று வழங்கும்தனியார் நிறுவனப் பணியாளர்களை மாநகர சாலைகளில் காண முடிந்தது. மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மருத்துவ மற்றும் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் வெளியில் யாரையும் அனுமதிக்காக வகையில் மாநகர், மாவட்ட காவல் துறையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றித் திரிந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முகக்கவசம் இல்லாமல்சாலைகளில் நடந்து சென்றவர்கள்எச்சரித்து அனுப்பிவைக்கப்பட்டனர். தேவைக்கேற்ப சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தியும், பல இடங்களில் சாலைகளை அடைத்து, ஒருவழிப்பாதையில் போக்குவரத்தை அனுமதித்தும் போலீஸார் கட்டுப்பாட்டுப் பணிகளை மேற்கொண்டனர். இப்பணிகளில் மாநகர், மாவட்ட காவல் துறை சார்பில் 2 ஆயிரம் போலீஸார், அவர்களுக்கு உதவியாக டிராபிக் வார்டன்கள், ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டனர்.

பொதுமக்களும் வீடுகளில் முடங்கியதால் முக்கிய சாலைகள், கடை வீதிகள், மக்கள் கூடும் பிற இடங்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படாததால், பேருந்து நிலைய வளாகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. ரயில் நிலையத்தில் மட்டும் சிறிதளவு பயணிகளை காண முடிந்தது.

இரவு வரை வியாபாரம்

முழு ஊரடங்கின்போது திருப்பூர் தொழில் துறையினரின் கோரிக்கைக்கு ஏற்ப தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதியளிக்கப்பட்ட நிலையில், தொழிலாளர்கள் தங்க வசதியுடைய பின்னலாடை உற்பத்திநிறுவனங்கள் தவிர, பெரும்பாலான நிறுவனங்கள் நேற்று செயல்படவில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் பின்னலாடை விற்பனை பரபரப்பாக இருக்கும் காதர்பேட்டை சந்தையிலும் அனைத்து கடைகள் மூடப்பட்டிருந்தன. தற்காலிக கடைகளும்அமைக்கப்படவில்லை.

உடுமலை

திருமூர்த்திமலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், முழு ஊரடங்கை முன்னிட்டு நேற்றும்சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் அடைக்கப்பட்டது. கரோனா கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வந்த நிலையில், அமராவதி முதலைகள் பண்ணைக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடைகள், வணிக வளாகங்கள் திறக்கப்படவில்லை.

தாராபுரம் பகுதியில் அனைத்து வணிக வளாகங்கள், கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்து நிலையம், கடை வீதி வெறிச்சோடி காணப்பட்டது. இருசக்கர வாகனங்களில் நகரில் வலம் வந்தவர்களை மறித்து, போலீஸார் எச்சரித்து அனுப்பினர். சிலருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in