

வெளியூரிலிருந்து ரயில்கள் மூலமாக நேற்று திருப்பூர் வந்த பயணிகள் பசியாற, அம்மா உணவகம் கை கொடுத்தது.
கரோனா பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால்,திருப்பூரில் நேற்று கடைகள்அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஓட்டல்களில் பார்சலுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், பெரும்பாலான ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், ஹைதராபாத்திலிருந்து திருப்பூர் வழியாக நேற்று அதிகாலை சென்ற விரைவு ரயில் உட்பட சில ரயில்களில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் திருப்பூரில் இறங்கினர்.
பின்னர், திருப்பூரிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பேருந்து வசதி இல்லாததால், ரயில் நிலைய வளாகத்திலேயே தங்கியிருந்தனர். ஓட்டல்களும் இல்லாத நிலையில், டவுன்ஹால் அருகே அம்மா உணவகம் செயல்படுவதை அறிந்து, அங்கு சென்று உணவு வாங்கி சாப்பிட்டனர். இதனால், அம்மா உணவகத்தில் நேற்று காலை மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.