

திருப்பத்தூர் அருகே கொள்ளு குடிப்பட்டி கண்மாயில் 38.4 ஏக்கரில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபரில் ஆயிரக்கணக்கான பறவைகள் இனப் பெருக்கத்துக்காக வருகின்றன. பிறகு பிப்ரவரி, மார்ச்சில் குஞ்சுகளுடன் மீண்டும் அவை சொந்த நாடுகளுக்குச் சென்றுவிடும். இப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் இந்த சரணாலயத்தைப் பாதுகாக்க ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட் டுள்ளது. இதில் மாவட்ட வன அலுவலா் உறுப்பினா் செயலராக உள்ளார். மற்றும் உறுப்பினர்கள் உள்ளனர்.
வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தை சுற்றி ஒரு கி.மீ.க்கு புதிய திட்டப் பணிகள், பறவைகளை அச்சுறுத்தும் வகையிலான பணிகளை மேற்கொள்ளக் கூடாது. புதிய பணிகளை மேற்கொள்ள சரணாலயப் பாதுகாப்புக் குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டும்.
இந்நிலையில் வேட்டங்குடி சரணாலயம் அருகே செல்லும் மேலூர் முதல் திருப்பத்தூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது. இப்பணியை மேற்கொள்ள சரணாலயப் பாதுகாப்பு குழு கூட்டத்தில் ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி ஒப்புதல் வழங்கி உள்ளார்.