

அரியலூர்: அரியலூர் மாவட்டத்திலுள்ள திருமழபாடி சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமி கோயிலில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், விபூதி, மாவுப்பொடி, திரவியப்பொடி, தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், பால் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. தொடர்ந்து, நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாதசுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிந்து பக்தர்கள் கலந்துகொண்டு நந்தியெம்பெருமானை வழிபட்டனர்.
இதேபோல, அரியலூர் ஆலந்துறையார் கோயில், விக்கிரமங்கலம் சோழீஸ்வரர், கீழப்பழுவூர் அருந்தவநாயகி உடனாய ஆலந்துறையார், பெரியமறை வேதநாயகி உடனாய வேதபுரீஸ்வரர், காமரசவல்லி பாலாம்பிகை உடனாய கார்கோடேஸ்வரர், திருமானூர் காமாட்சியம்மன் உடனாய கைலாசநாதர், காரைப்பாக்கம் மாணிக்க வண்ணநாதர் உள்ளிட்ட சிவாலயங்களில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.