சுரண்டை ஜவுளிக்கடையில் தீ விபத்து :
தென்காசி மாவட்டம், சுரண்டையில் உள்ள சங்கரன்கோவில் சாலையில் அண்ணா சிலை அருகில் பிரபலஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. 3 தளங்களைக்கொண்ட இந்த கடையை செங்கோட்டையைச் சேர்ந்தசெந்தில்குமார் என்பவர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலையில் ஜவுளிக்கடையில் இருந்து புகை வருவதை அப்பகுதியில்உள்ளவர்கள் பார்த்துள்ளனர். இது குறித்து சுரண்டைதீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ வேகமாகப்பரவியதால் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 5 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 15 லாரிகளில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. 6 மணி நேரத்துக்கு மேல் தீயணைப்பு படையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
தீ விபத்தில், கடையில் இருந்ததுணிகள், பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீ விபத்துக்கான காரணம் குறித்து சுரண்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
