

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள மஞ்சள், பீடி இலை, வெங்காயம் விதைகளை கியூ பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் பொருட்கள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் இரவு தாளமுத்து நகர் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கடற்கரையில் 2 சரக்கு வாகனங்களில் இருந்து சிலர்மூட்டைகளை இறக்கி, படகில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
போலீஸாரை பார்த்ததும் அவர்கள் தப்பியோடிவிட்டனர். அங்கு நின்ற மினி லாரி, ஆட்டோ மற்றும் படகில் போலீஸார் சோதனை நடத்தினர். அவற்றில் சுமார் 2,500 கிலோ எடை கொண்ட மஞ்சள் 80 மூட்டைகளிலும், சுமார் 1,500 கிலோ எடை கொண்ட பீடி இலைகள் 50 மூட்டைகளிலும், சுமார் 150 கிலோ எடை கொண்ட வெங்காயம் விதைகள் 5 மூட்டைகளிலும் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் என்று கூறப்படுகிறது. சரக்கு வாகனங்கள், படகு மற்றும் அங்கிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். பொருட்களை கடத்த முயன்றவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.