ஆம்பூரில் நடைபெற்று வரும் தூய்மைப்பணிகளை நேரில் ஆய்வு செய்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள்.
ஆம்பூரில் நடைபெற்று வரும் தூய்மைப்பணிகளை நேரில் ஆய்வு செய்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள - நகராட்சி பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு : ஆம்பூரில் ஆட்சியர் சிவன் அருள் ஆய்வு

Published on

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் ஒவ்வொரு நகராட்சிகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் மொத்த பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்துள்ளது. கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளில் கரோனா தடுப்புப்பணிகளும், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட நேதாஜி ரோடு, உமர் ரோடு, பஜார் பகுதி, பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட 36 வார்டுகளிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று நடைபெற்றது.

நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஒவ்வொரு வார்டாக சென்று கிருமி நாசினி தெளித்து, நோய் தடுப்புப் பணிகளை மேற்கொண்டனர். நகராட்சி ஆணையாளர் சவுந்திரராஜன் உத்தரவின் பேரில், நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், வருவாய்த் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் வீடு, வீடாக சென்று கிருமி நாசினி தெளித்தல், உடல் வெப்பம் பரிசோதனை உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.

ஆம்பூர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் தீயணைப்பு வாகனத்தின் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் ஆம்பூர் நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஆம்பூர் நகராட்சியில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள ராட்சத இயந்திரம் மூலமும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறும்போது, "ஒவ்வொரு வட்டத்திலும் கரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்வதுடன், அங்குள்ள மக்கள் வெளியே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதேநேரத்தில் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கு தேவையான அனைத்து உதவிகளை அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும். நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி அரசு மருத்துவமனைக்கு அவர்களை பாதுகாப்புடன் கொண்டு வந்து அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.

அப்போது, ஆம்பூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன், சுகாதார அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in