

திருப்பூர் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரும், உதவி ஆணையருமான கண்ணன் தலைமையில், வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள், மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கையாள்வது குறித்து தேர்தல் முதன்மைப் பயிற்சியாளர் மாரிமுத்து மூலமாக அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. திரை மூலமாகவும் பயிற்சி விளக்கம் அளிக்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் 42 அலுவலர்கள் பங்கேற்றனர். வாக்கு எண்ணிக்கைக்கு மொத்தம் 14 மேஜைகளும், ஒரு மேஜைக்கு 3 அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர், நுண் பார்வையாளர், உதவியாளர் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை 29 சுற்றுகளில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டது.
உதவி ஆணையர் வாசுகுமார், தேர்தல் பிரிவு அலுவலர் குமரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.