

ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதையடுத்து, அவிநாசி மின் வாரிய அலுவலகம் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டது.
கடந்த மாதம் முதல் அவிநாசிபகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அவிநாசி மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரியும் 40 வயது பெண், 42 வயது ஆண் ஊழியருக்கு, கடந்த இரு நாட்களுக்கு முன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் சிகிச்சைக்காக அவிநாசி தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அவிநாசி மின்வாரிய அலுவலகத்தில் உள்ளசெயற்பொறியாளர் அலுவலகம், தொழில் நுட்பப் பிரிவு, நிர்வாகப் பிரிவு, வருவாய் பிரிவு, உதவி மின்பொறியாளர் அலுவலகங்கள் உட்பட அனைத்து அலுவலகங்களும் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.
மேலும், மின்வாரிய அலுவலக பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அலுவலகத்தில் பணிபுரியம் 50-க்கும் மேற்பட்டோருக்கு சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல, சேவூர் காவல்நிலையத்தில் பணிபுரியும் 57 வயது ஆண் காவலருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டதால், காவல் நிலையபகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சேவூர் காவல் நிலையத்தில்பணிபுரியும் காவலர்களுக்கு கரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.