

வட மாநிலங்களுக்கு பயணிக்கும் தொழிலாளர்களால், திருப்பூர் ரயில் நிலையத்துக்கு நாள் தோறும் ரூ.5 லட்சம் வருவாய் கிடைத்து வருவதாக ரயில்வே துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ரயில்வே பிரிவு அதிகாரிகள் கூறும்போது, "திருப்பூர் ரயில்நிலையத்தை அன்றாடம் கடக்கும் ரயில்களின் எண்ணிக்கை 43. வாராந்திர சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 32. இதில் வட மாநிலத்துக்கு நாள்தோறும் சுமார் ஆயிரம் பேர் செல்கிறார்கள். அங்கிருந்து பிழைப்புக்காக திருப்பூர் வருபவர்களின் எண்ணிக்கை கடந்த 3 வாரங்களாக வெகுவாக குறைந்துள்ளது.
ஒடிசா, பிஹார் மாநிலங்களுக்கு நாள்தோறும் குறைந்தபட்சம் 600 பேர் செல்கிறார்கள். அதேபோல, ஜார்க்கண்ட், மேற்குவங்கம், அசாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களுக்கு ஆயிரம் பேர் முன்பதிவு செய்து சொந்த ஊருக்கு செல்கிறார்கள். இதனால், ரயில்வே துறைக்கு திருப்பூரில் இருந்து நாள்தோறும் ரூ.5 லட்சம் வருவாய் கிடைக்கிறது. கடந்த காலங்களை காட்டிலும், தற்போது வடமாநிலங்களுக்கு பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது’’ என்றனர். இந்நிலையில், தொழிலாளர் களை தக்கவைக்கும் விதமாக ஊரடங்கு வராது என, வடமாநிலத் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் பின்னலாடை நிறுவனங்கள் ஈடுபடத்தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.