

ரயில்வே பணிகளை மேற்கொண்ட தற்கான நிலுவைத் தொகையை வழங்கக்கோரி, ஈரோடு ரயில் நிலையத்தில் ஒப்பந்ததாரர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு லட்சுமி நகரைச் சேர்ந்தவர் துரைக்கண்ணு (41). இவர் கடந்த மூன்று ஆண்டு களுக்கு முன்பு திருச்சி டிவிஷன் ரயில்வே பயிற்சி விடுதியில், ஒப்பந்த அடிப்படையில் ரூ.1.25 கோடி மதிப்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்த பணி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்துள்ளது. செய்த பணிகளுக்கு, இதுவரை பாதி தொகை மட்டுமே ரயில்வே நிர்வாகம் வழங்கியுள்ளது. மீதம் உள்ள நிலுவைத்தொகையை வழங்க வலியுறுத்தி பலமுறை கோரிக்கை விடுத்தும், ரயில்வே நிர்வாகம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை துரைக்கண்ணு ஈரோடு ரயில் நிலையத்திற்கு, போர்வை தலையணையுடன் வந்தார். ரெயில் நிலைய 3-வது நடைமேடையில் திடீரென அமர்ந்து, தர்ணா போராட்டத்தைத் தொடங்கினார். நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று நோட்டீஸை அவர் அருகில் ஒட்டிவைத்திருந்தார்.
இதுதொடர்பாக ஈரோடு ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தினர். இது திருச்சி ரயில்வே பணிமனை தொடர்பான விவகாரம் என்பதால், அங்கு சென்று முறையிடுமாறு போலீஸார் தெரிவித் தனர். அதன்பின்னர் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
துரைக்கண்ணு கூறும்போது, ரயில்வே பணிகளை ஒப்பந்தம் எடுத்து, 20 பணியாளர்களைக் கொண்டு செய்து முடித்துள்ளேன். 8 மாதமாக ரூ.60 லட்சம் நிலுவைத் தொகையை வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனால் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. எனது குடும்பம் வறுமையில் வாடி வருகிறது. நிலுவைத் தொகை கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டேன், என்றார்.