

திருப்பத்தூரில் கீழே கிடந்த ரூ.70 ஆயிரத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வியாபாரிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருப்பத்தூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சண்முகராஜா. இவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் செல்லும்போது செங்கல் விற்பனை மூலம் கிடைத்த ரூ.70 ஆயிரத்தை எடுத்துச் சென்றார். ஆனால் அதை வழியில் தவறவிட்டார். தான் சென்ற பகுதியில் தேடிப் பார்த்தும் பணம் கிடைக்கவில்லை.
இது குறித்து அவர் திருப்பத்தூர் நகர் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இந்நிலையில் திருப்பத்தூர் மூலக்கடை வீதியில் புளியம் பழம் வியாபாரம் செய்யும் பீர்முகமது என்பவர், தனது கடை அருகே ரூ.70 ஆயிரம் கீழே கிடந்ததாகக் கூறி திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்தார்.
இதையடுத்து பணத்தை தவறவிட்ட சண்முகராஜாவிடம் ரூ.70 ஆயிரத்தை போலீஸார் வழங்கினர். கீழே கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த வியாபாரி பீர்முகமதுவை இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, எஸ்.ஐ. பிரிட்டோ ஆகியோர் பொன்னாடை போர்த்தி பாரா ட்டினர்.