திருப்பூர் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான -  வாக்கு எண்ணுவோருக்கு பணி ஒதுக்கீடு :

திருப்பூர் மாவட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான - வாக்கு எண்ணுவோருக்கு பணி ஒதுக்கீடு :

Published on

திருப்பூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு, கணினி மூலமாக ஆட்சியர் நேற்று பணி ஒதுக்கீடு செய்தார்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணியில்ஈடுபட உள்ள மேற்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு, கணினி மூலமாக பணி ஒதுக்கீடு செய்யும் பணி, ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

திருப்பூர் - பல்லடம் சாலையில் அமைந்துள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வரும்2-ம் தேதி காலை வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் தலா 14 வாக்கு எண்ணும் மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் 136 வாக்குஎண்ணும் மேற்பார்வையாளர்கள், 136 உதவியாளர்கள், 150 நுண்பார்வையாளர்கள் ஆகியோருக்கு, கணினி மூலமாக ஆட்சியர் பணி ஒதுக்கீடு செய்தார். இவர்களுக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதே போல வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம், திருப்பூர்கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் ஜெகநாதன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

வாக்கு எண்ணும் மைய முகவர், தலைமை முகவர், வாக்கு எண்ணிக்கை முகவர் நியமனம், அவ்வாறு நியமனம் செய்யப்படுகிறவர்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in