

தலைவாசல் தினசரி காய்கறி சந்தையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் மிகப்பெரிய தினசரி காய்கறி மொத்த சந்தை தலைவாசலில் உள்ளது. இங்கு தினமும் அதிகாலை தொடங்கி நண்பகல் 12 மணி வரை காய்கறி மொத்த வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
தலைவாசல் சுற்று வட்டார கிராமங்கள், நாமக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் ஏராளமானோர், இங்கு காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இங்கு காய்கறிகளை வாங்கும் வியாபாரிகள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிதம்பரம், கடலூர், சென்னை, புதுச்சேரி என பல்வேறு நகரங்களுக்கு காய்கறிகளை அனுப்பி வைக்கின்றனர்.
இதன் காரணமாக, பல்வேறு மாவட்டங்களுக்கு தலைவாசலுடன் தினமும் நேரடி தொடர்பு இருந்து வருகிறது. மேலும், விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், சிறு கடை வைத்துள்ளவர்கள் என தினமும் பல ஆயிரம் பேர் வந்து செல்லும் இடமாக, காய்கறி சந்தை இருக்கிறது.
எனவே, சந்தையில், கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்த வேண்டும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:
தலைவாசல் தினசரி சந்தையில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுவதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அனைவரையும் முகக் கவசம் அணிய கட்டாயப்படுத்துவது, கபசுரக் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். தினசரி இருவேளை கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.