

திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மாவட்டம் முழுவதும் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பலரும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்த முன்வந்த நிலையில், மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டது. சில இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்துக்கு 13,920 டோஸ் தடுப்பூசி ஒதுக்கப் பட்டு, நேற்று திருப்பூருக்கு வந்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் இருந்து கோவிஷீல்டு மண்டலம் வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனுப்பப்பட்டது. இதில் திருப்பூர் மாவட்டத்துக்கு 13,920 டோஸ் வந்துள்ளது.
இவை அரசு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரித்து அனுப்பப்படுகின்றன. தட்டுப்பாடின்றி கரோனா தடுப்பூசி போடப்படும்.வரும் 22-ம்தேதி முதல் (இன்று) தடுப்பூசிபோடும் பணி தீவிரப்படுத்தப்படும். இந்த தடுப்பூசி முடியும் தருவாயில், கூடுதலாக கேட்டுப் பெறப்படும். அனைத்துபொதுமக்களுக்கும் தடுப்பூசி கிடைக்கும். இதனால் மக்கள் அச்சமின்றி இருக்கலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.