காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் - இரவு 8 மணிக்கு மேல் வெளியூர் பேருந்து இயங்காது :

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் -  இரவு 8 மணிக்கு மேல்  வெளியூர் பேருந்து இயங்காது :
Updated on
1 min read

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக காஞ்சிபுரம் மண்டல அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை பேருந்துகள் இயங்காது. அதேபோல, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேரமும் பேருந்துகள் இயங்காது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களில் இருந்தும் நகரப் பேருந்துகள் இயங்கும். மத்தியப் பேருந்து நிலையம் மற்றும் இதர பேருந்து நிலையங்களில் இருந்து 9 மணிக்குப் புறப்படும் உள்ளூர் பேருந்துகள் 10 மணி வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல, செங்கல்பட்டு மாவட்டத்திலும் இதே நேரம் பின்பற்றப்படும்.

காஞ்சிபுரம் மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் தொலைதூர வழித்தட புற நகர்ப் பேருந்துகளின் நேர விவரம்: சென்னை, பூந்தமல்லி, தாம்பரம், வேலூர் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கடைசியாக இரவு 8 மணிக்குப் பேருந்து இயக்கப்படும். திருச்சிக்கு மாலை 3.15 மணிக்கும், சேலத்துக்கு பிற்பகல் 2.30, விழுப்புரத்துக்கு இரவு 7, திருவண்ணாமலைக்கு மாலை6, செய்யாறு, திருப்பதி, திருத்தணிக்கு இரவு 8 மணிக்குள்ளும் பேருந்துகள் இயக்கப்படும்.

தொலைதூரம் செல்லும் பயணிகள் இரவு 10 மணிக்குள் தாங்கள் சென்றடைய வேண்டிய இடத்துக்குச் செல்ல வேண்டும். இதையொட்டி, தங்களது பயணத்தையும், பயண நேரத்தையும் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in