

திருப்பூர் தண்ணீர்பந்தல் காலனி பகுதியிலுள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், கோட்டாட்சியர் ஜெகநாதன், வடக்கு வட்டாட்சியர் ஜெகநாதன் மற்றும் போலீஸார் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த நிறுவனத்தில் ஒடிசாவைச் சேர்ந்த 19 பெண் தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.
விசாரணையில், சொந்த ஊருக்குச் செல்ல விருப்பம் தெரிவித்த நிலையில், சம்பளம் கூட வழங்கப்படாமல் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து 19 பேரையும் அதிகாரிகள் மீட்டு,நேற்று முன்தினம் மதியம் திருப்பூரில் இருந்து ஒடிசா மாநிலத்துக்கு ரயிலில் அனுப்பிவைத்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு, திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் மற்றும் மாநில தொழிலாளர் நலத் துறை ஆணையர் ஆகியோருக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2 வார காலத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.