

மேட்டூர் அருகே வன எல்லையில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால், அப்பகுதி மக்கள் அச்ச மடைந்துள்ளனர். யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி காப்புக்காட்டின் எல்லை பகுதியில் சுற்றும் ஒற்றை யானை கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டம் வனப் பகுதியை ஒட்டியுள்ள மேட்டூர் அடுத்த கொளத்தூர் மற்றும் நீதிபுரம் கிராம விளை நிலங்களில் புகுந்து பயிர்களை தேசப்படுத்தி வருகிறது.
இதுதொடர்பாக நீதிபுரம் கிராம மக்கள் கூறும்போது, “வனத்தை ஒட்டியுள்ள வாழைத்தோட்டம் மற்றும் வயல்களில் புகும் ஒற்றை யானை வாழை மற்றும் சோளத்தை உண்ப துடன், அவற்றை சேதப் படுத்தி வருகிறது. சில நேரங்களில் பகல் நேரங்களிலும் விளை நிலங்களுக்கு வருவதால் அச்சமாக உள்ளது” என்றனர்.
இதனிடையே, மேட்டூர் வனச்சரக ஊழியர்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக மேட்டூர் வனச்சரகர் பிரகாஷ் கூறிய தாவது:
ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி காப்புக்காட்டில் சுற்றித்திரியும் ஒற்றை யானை கொளத்தூர் கிராம விவசாய நிலத்துக்குள் அவ்வப்போது வந்து செல்கிறது. யானையை வனப்பகுதிக்கு விரட்ட வன ஊழியர்கள் 5 பேர் மற்றும் தன்னார்வலர்களைக் கொண்டு டமாரம் அடித்தும், பட்டாசு வெடித்தும் விரட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், நீதிபுரம், தண்டா, பாலாறு உள்ளிட்ட பகுதி மக்கள் எச்சரிக்கையாக இருக்க தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்யப்படுகிறது. யானையை பார்த்தால் பொதுமக்கள் அதன் அருகே செல்லாமல் 300 அடி தொலைவுக்கு மேல் விலகிச் செல்ல வேண்டும். விளை நிலங்களில் மின்வேலியை பயன் படுத்தக் கூடாது என எச்சரித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.