Published : 19 Apr 2021 03:15 AM
Last Updated : 19 Apr 2021 03:15 AM

வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறை பணியின்போது - செல்போன் பேசிய காவலர் பணியில் இருந்து விடுவிப்பு : ஏற்காடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நடவடிக்கை

ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறை பாதுகாப்புபணியின்போது செல்போன் பேசிய காவலரை பணியில் இருந்து விடு வித்து தேர்தல் நடத்தும் அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் உள்ளிட்டவைஅனைத்தும், அந்தந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்குப் பாதுகாப் புடன் வைக்கப்பட்டுள்ளன.

கெங்கவல்லி (தனி), ஆத்தூர்(தனி) சட்டப்பேரவைத் தொகுதிகளின் பதிவான வாக்குப்பெட்டிகள், தலைவாசலை அடுத்த மணிவிழுந்தான் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப் பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளன.

சேலம் தெற்கு, வீரபாண்டி, ஏற்காடு ஆகிய 3 தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் அம்மாப் பேட்டை தனியார் கலை அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. சங்ககிரி, எடப்பாடி தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சங்ககிரியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்திலும், சேலம் மேற்கு, சேலம் வடக்கு, ஓமலூர், மேட்டூர் ஆகிய 4 தொகுதிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஏற்காடு தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மைய பாதுகாப்பு அறை பாதுகாப்பு பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருப்பதாக புகார் எழுந்தது.

மேலும், இதுதொடர்பாக அங்கு வைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவிலும் காட்சிகள் பதிவாகின. இதுதொடர்பாக, ஏற்காடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோவிந்தனிடம், திமுக-வினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து,செல்போன் பயன்படுத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர், பாதுகாப்பு அறை பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பாக தேர்தல் அலுவலர்கள் கூறியதாவது:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை பகுதிக்கு செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. அந்த அறைக்கு வெளியே உள்ள மாஜிஸ்திரேட் அந்தஸ்திலான அதிகாரியிடம், செல்போன் உள்ளிட்டவற்றை ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும் என்று விதிமுறை. இதை மீறிய எல்லைப் பாதுகாப்பு படை வீரர், இனி இங்கு பணியில் ஈடுபடுத்தப்பட மாட்டார்.

ஏற்காடு உள்ளிட்ட மாவட்டத்தின் 11 தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அனைத்து இடங்களிலும், இதுபோன்ற புகார் வராத வண்ணம் தீவிர கண்காணிப்புக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x