Published : 19 Apr 2021 03:17 AM
Last Updated : 19 Apr 2021 03:17 AM

கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பதால் - கோயம்பேடு சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை :

சென்னை

சென்னையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இனி கோயம்பேடு சந்தைக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விட சிஎம்டிஏ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு கரோனா தொற்று அதிகரித்த நிலையில், மே மாதத்தில் கோயம்பேடு சந்தை மூடப்பட்டது. திருமழிசை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்காலிகமாக சந்தைகள் இயங்கி வந்தன. பின்னர் தொற்று குறையத் தொடங்கிய நிலையில், வியாபாரிகளின் கோரிக்கைகளை ஏற்று கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் கோயம்பேடு சந்தை திறக்கப்பட்டது. அப்போது வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டது.

பின்னர் தொற்றால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை குறைந்த நிலையில் மாதத்தில் இரு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் விடுமுறை விடுவது என முடிவெடுத்து தளர்வுகள் அளிக்கப்பட்டன.

வியாபாரிகள் எதிர்ப்பு

சென்னையில் தற்போது கரோனா வேகமாக பரவி வருகிறது. தினமும் சுமார் 2,500 பேருக்கு மேல் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர். அதனால் கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனைக்கு சிஎம்டிஏ நிர்வாகம் தடை விதித்தது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், முடிவு எதுவும் எட்டப்படாமல், சந்தையில் சில்லறை விற்பனை தொடர்கிறது. அதே நேரத்தில் மீண்டும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் சந்தைக்கு விடுமுறை விட சிஎம்டியே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சந்தை இயங்காது

எனவே இனி வரும் வாரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு சந்தை இயங்காது என கோயம்பேடு அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜி.டி.ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x