திருப்பூர் மாநகர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பற்றாக்குறையால் - கரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம் : அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருப்பூர் மாநகர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பற்றாக்குறையால்  -  கரோனா தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்  :  அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
Updated on
1 min read

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனாதடுப்பூசி மருந்து இல்லாததால், தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கரோனாதடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதால் கிராமங்கள், ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி என பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் தாமாக முன்வந்து ஆர்வமுடன் தடுப்பூசி போட தொடங்கினர். இந்நிலையில், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால், முதல் தவணை தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரிலுள்ள பெரும்பாலான நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையங்களில் தடுப்பூசி மருந்துகள் இல்லாததால், நேற்று தடுப்பூசி போட வந்த பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறும்போது, "திருப்பூர் போன்ற தொழிலாளர்கள் நிறைந்த நகரில், ஞாயிற்றுக்கிழமை என்பது அனைவருக்கும் விடுமுறை தினம். இந்த நாளில் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள நினைப்பார்கள். தற்போது தடுப்பூசி கையிருப்பு இல்லை என்று கூறி திருப்பி அனுப்புவது ஏமாற்றத்தை அளிக்கிறது.

அதேபோல, செவ்வாய்க்கிழமைக்கு மேல் வருமாறு சில இடங்களில் கூறுகிறார்கள். இதனால் அன்றைய தினம், அதன்பிறகு இரண்டு நாட்கள் என மூன்று நாட்கள்ஓய்வெடுக்கும் நிலை இருப்பதால், நிறுவனங்களுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. இதனால் எங்களின் வருவாய் பாதிக்கப்படுவதுடன், தடுப்பூசி போடுவதில் இருந்து பலர் விலகிச்செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையை உடனடியாக சரி செய்ய பொது சுகாதாரத் துறையை வலியுறுத்தி இருந்தோம். ஆனால், அவர்கள் தரப்பில் தடுப்பூசி வரவில்லை என்பது மட்டுமே பதிலாக உள்ளது" என்றனர். திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் கோவிஷீல்டு மருந்து மட்டுமே கையிருப்பு உள்ளது; கோவாக்‌சின் இல்லை. அரசு மருத்துவர்கள் கூறும்போது, "மாநகர் மற்றும் மாவட்டத்தில் தடுப்பூசி வராததால், பல்வேறு இடங்களில் தடுப்பூசி போடப்படவில்லை. தடுப்பூசி போட வரும்பொதுமக்களை செவ்வாய்க்கிழமை வருமாறு கூறுகிறோம். தற்போது விழிப்புணர்வு அதிகரித்திருப்பதும், தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு முக்கியக் காரணம். தடுப்பூசி வந்ததும், விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும். மாநகரின் பெரும்பாலான இடங்களில் தற்போது தடுப்பூசி கையிருப்பில் இல்லை. ஊரகப் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில், சில இடங்களில் மட்டுமே சொற்ப அளவில் உள்ளது" என்றனர்.

திருப்பூர் மாவட்ட பொது சுகாதாரத் துறையினர் கூறும்போது, "இதுவரை தடுப்பூசி வரவில்லை. வந்தவுடன் அனைவருக்கும் பிரித்து அனுப்பிவைக்கப்படும்"என்றனர். அவிநாசி அரசு மருத்துவமனையில் நேற்று பூட்டிவைக்கப்பட்டிருந்த கரோனா தடுப்பூசி போடும் அறை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in