

திருநெல்வேலி மாநகராட்சிசார்பில் கரோனா நோய்பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டன.
திருநெல்வேலியில் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை சாலையிலுள்ள 40 கடைகளுக்கு துண்டுப் பிரசுரங்களை மாநகராட்சி அலுவலர்கள் வழங்கினர். அதில்தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள்: இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் தொற்று 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. தமிழக அரசுஇதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நோய் பரவலை கட்டுப்படுத்த சமூகஇடைவெளி, முகக்கவசம் அணிவதை அனைவரும் கடைபிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே, தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் அனைவரும் முககவசம் அணிந்து பணிபுரிவதையும், சமூகஇடைவெளியை பின்பற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவது அல்லது சானிடைசர் வைத்து சுத்தம் செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாநகராட்சி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவனைகளில் தடுப்பூசி போட்டு சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். தவறினால் தொற்றுநோய் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.