பல்லடம் அருகே உயர் மின்கோபுரம் திட்ட பணிக்கு எதிர்ப்பு - நீதிமன்ற அறிவுறுத்தல்படி ஆட்சியர் பேச்சு நடத்த வேண்டும் : 2-வது நாள் போராட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

பல்லடம் அருகே உயர் மின்கோபுரம் திட்ட பணிக்கு எதிர்ப்பு -  நீதிமன்ற அறிவுறுத்தல்படி ஆட்சியர் பேச்சு நடத்த வேண்டும்  :  2-வது நாள் போராட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
Updated on
1 min read

பல்லடம் அருகே உயர் மின்கோபுரம் அமைப்பதற்கான அளவீட்டு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகள், நீதிமன்ற அறிவுறுத்தல்படி ஆட்சியர் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழக அரசின் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் இணைந்து தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் உட்பட 10 மாவட்டங்களில் உயர் மின்கோபுரத் திட்டங்களை விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக செயல்படுத்த உள்ளது. இதற்காக, தாராபுரம் அருகே நியூ புகளூர்- இடையர்பாளையம் வரை 400 கி.வாட் உயர் மின் திட்டம் தயாரிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பல்லடம் அருகே வாவிபாளையம் கிராமத்தில் விவசாயிகளில் எதிர்ப்பையும் மீறி நேற்று முன்தினம் அளவீட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதற்குஎதிர்ப்பு தெரிவித்து காளியப்பகவுண்டன்புதூரில் பவர் கிரிட், வருவாய்த் துறையினர் மற்றும் விவசாயிகள் திரண்டனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, "நிலம் கையகப் படுத்துவது மற்றும் பயிர் இழப்பீடு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. மேலும், வழக்கின் விசாரணை நாளை (இன்று) நடைபெறுவதால், விசாரித்து முடிக்கும் வரை காத்திருக்குமாறு கூறினோம்.

ஆனால், அதற்குள் பணிகளை தொடங்கியுள்ளனர். நீதிமன்ற அறிவுறுத்தல்படி, பாதிக்கப்பட்ட விவசாயிகளை அழைத்து ஆட்சியர் இதுவரை பேசவில்லை. ஆனால், நிலம் அளவீட்டு பணியை தொடர்கின்றனர். இழப்பீட்டை உயர்த்துவதுடன், பயிர்களுக்கான இழப்பையும் கூடுதலாக வழங்கக் கோரி வருகிறோம். இதனை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. பணிகளை தொடங்கும் முன்பாக, விவசாயிகளுடன் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதுவரை இப்பகுதியில் பணிகளை தொடரவிடமாட்டோம்" என்றனர்.

அவர்களை சமாதானப்படுத்தும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர். ஆனால், விவசாயிகள் ஏற்காததால் அளவீட்டு பணிகள் நேற்று நடைபெறவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in