

தேனி மாவட்டம் அன்னஞ்சி முனுசாமி கோயில் வீதியைச் சேர்ந்தவர் கண்ணன் (30). இவர், கோவையில் உள்ள தனியார் பம்ப் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவருடன் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்மா (29) என்பவரும் பணிபுரிந்து வந்தார். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பெரியாயிபாளையம் மதுபானக் கூடத்தில் ஊழியராக பணிபுரியும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலா (எ) பாலமுருகன் (30). இவரும், தர்மாவும் நண்பர்கள். தர்மா மூலமாக கண்ணனும் பாலாவுக்கு அறிமுகமாகியுள்ளார்.
இந்நிலையில், தர்மா ஒரு பெண்ணுடன் அலைபேசியில் பேசி பழகி வந்துள்ளார். இதையறிந்த கண்ணன் அந்த பெண்ணின்அலைபேசி எண்ணை தொடர்ந்துகேட்டு வந்ததால் தர்மா கோபமடைந்தார். 2013 அக்டோபர் 28-ம் தேதி ஊத்துக்குளி மதுபானக் கூடத்தில் வேலை செய்யும் பாலாவை சந்திக்க தர்மாவும், கண்ணனும் சென்றனர். அன்று இரவு மூவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது தர்மாவும், பாலாவும் இணைந்து கண்ணனை மதுபாட்டிலாலும், கல்லாலும் அடித்துகொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக ஊத்துக்குளி போலீஸார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.
திருப்பூர் இரண்டாவது மாவட்டகூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தர்மா, பாலா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அனுராதா நேற்று தீர்ப்பளித்தார். அபராதத்தை கட்டத் தவறினால், கூடுதலாக 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். கோவை மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.
அரசு தரப்பில் வழக்கறிஞர் ப.முருகேசன் ஆஜராகி, 21 சாட்சிகளிடம் விசாரித்தார்.