

பிளஸ் 2 மாணவர்களுக்கு முதற்கட்ட செய்முறை தேர்வு நேற்று நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் 16,470 மாணவர்கள் எழுதினர்.
கரோனா பாதிப்புகளுக்கு மத்தியில் தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 தவிர, பிற மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ‘ஆல் பாஸ்' வழங்கப்பட்டுள்ளது. இதில் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் வரும் மே 5-ம் தேதி பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. மே 31-ம் தேதிவரை இத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மே 3-ம் தேதி நடக்க இருந்தமொழிப்பாடத் தேர்வுகள் மே 31-ம்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் முதற்கட்டமாக பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்கான பயிற்சி வகுப்புகள் நேற்று முன்தினம் நடத்தப்பட்டன. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 16,470 மாணவ, மாணவியர் கரோனா விதிகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி செய்முறை தேர்வில் பங்கேற்றனர்.
இதுகுறித்து மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கரோனா பரவல் அதிகமாக உள்ள சூழலில், பள்ளி ஆய்வகங்களில் கரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றி, மாணவர்கள் செய்முறை தேர்வில் பங்கேற்றனர். அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பிற பாட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதலை வழங்கி மாணவர்களின் செய்முறை தேர்வை புகார்களுக்கு இடமில்லாமல் நடத்தவேண்டும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.அறிவுறுத்தியபடி, கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் நேற்று தொடங்கின. வரும் 23-ம் தேதி வரை இரண்டுகட்டங்களாக தேர்வு நடைபெறுகிறது. முதல் கட்டத்தில் மாவட்டத்தில் 356 பள்ளிகளில் இருந்து 16,470 மாணவ,மாணவியர் இந்த தேர்வை 236 மையங்களில் நேற்று எழுதினர். கரோனா விதிகளை பின்பற்றி தேர்வுகளை நடத்த போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன’’என்றனர்.
திருப்பூர்
திருப்பூரில் ஜெய்வாபாய்மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று செய்முறைதேர்வுக்கு வந்த மாணவிகளுக்கு, அரசு வழிகாட்டுதலின்படி கிருமிநாசினி வழங்கப்பட்டு, உடல் வெப்பபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார்.