

திருப்பூர் - அவிநாசி சாலை ஓடக்காடு பகுதியில் கியாஸ் ஏஜென்சி நிறுவனம் உள்ளது. இங்கு திருச்செல்வன், சுரேஷ், நாகராஜ், சிவக்குமார் ஆகிய 4 தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், நடப்பு ஆண்டு தொடங்கியவுடன் ஜன.2-ம் தேதி முதல் இவர்களுக்கு வேலைவழங்க நிர்வாகம் மறுத்து வருவதாக சிஐடியு பொது தொழிலாளர் சங்கத்தில் தொழிலாளர்கள் முறையிட்டனர்.
இதையடுத்து, சங்க மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், ஓடக்காடு முன்னாள் மாமன்ற உறுப்பினர் என்.குணசேகரன் உள்ளிட்டோர், சம்பந்தப்பட்ட கியாஸ் நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில், தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவது குறித்து எந்த உத்தரவாதமும் நிர்வாகம் வழங்கவில்லை. மூன்றரை மாதங்களாக இப்பிரச்சினை நீடித்து வரும் நிலையில், தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி அந்த நிறுவனம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த, சிஐடியு பொது தொழிலாளர் சங்கம் முடிவு செய்தது.
அதன்படி, நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஜி.சம்பத், பொது தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், சிஐடியு முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் டி.துரைசாமி மற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.