

திருமணம், கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சியில் இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருமண நிகழ்ச்சியில் 100 பேர் பங்கேற்கவும், இறப்பு நிகழ்ச்சியில் 50 பேர் பங்கேற்கவும், கோயில் உள்ளிட்ட விசேஷங்களில் சமூகஇடைவெளியை கடைபிடித்து, கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனால், திருமணம், கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட விசேஷங்களில் மெல்லிசை நிகழ்ச்சி கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரளாக வந்த மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், ஆட்சியர் ராமனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவில், ‘கடந்த ஒரு ஆண்டாக கரோனா தொற்று பரவல் காரணமாக மேடை மெல்லிசை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. கோயில் திருவிழா, திருமண நிகழ்ச்சி மற்றும் பிற விசேஷங்களில் இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இத்தொழிலை நம்பி 25 ஆயிரம் இசை கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களின் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, இசைக் கலைஞர்களின் தொழில் பாதிப்படையாத வகையில், திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளில் மேடை மெல்லிசை நிகழ்ச்சிகள் நடத்த கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி வழங்க வேண்டும்’ என கூறியுள்ளனர்.