

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் கரோனா சிகிச்சைக்காக 100 படுக்கைகள் கொண்ட சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட உள்ளது.
திருப்பத்தூர் சுவிடிஸ் மிஷன் மருத்துவமனையில் சுகாதாரத் துறை, சித்த மருத்துவத் துறை சார்பில் கரோனா சிகிச்சைக்கான சித்தா சிறப்பு வார்டு கடந்த ஆண்டு செயல்பட்டது. கரோனா பரவல் குறைந்ததும் அந்த பிரிவு செயல்படவில்லை.
இந்நிலையில் தற்போது கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் திருப்பத்தூர் சுவிடிஸ் மிஷன் மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 100 படுக்கைகள் கொண்ட சித்தா சிறப்பு வார்டு மீண்டும் அமைக்கப்பட்டு வருகிறது.
இதை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் இங்கு 300-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று கரோனாவிலிருந்து குணமடைந்தனர். தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சித்தா சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட உள்ளது என்று கூறினார்.
மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் இளங்கோ மகேஸ்வரன், சுகாதார துணை இயக்குநர் யசோதாமணி, மாவட்ட சித்தா மருத்துவ அலுவலா் பிரபாகரன், வட்டாட்சியர் ஜெயந்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.