

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தோட்டக்கலை மற்றும் வேளாண் துறை காலிப்பணியிடங்களுக்கான தேர்வு இன்று தொடங்குகிறது. இதில், சேலம் மாவட்டத்தில் 6,686 பேர் பங்கேற்கவுள்ளனர், என ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை அலுவலர்(விரிவாக்கம்), தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான போட்டித்தேர்வு நடக்கிறது. இத்தேர்வு இன்று (17-ம் தேதி) முதல் 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் ஆட்சியர் ராமன் பேசியதாவது:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில், தோட்டக்கலைத்துறை மற்றும்வேளாண்மைத்துறை காலிப் பணியிடத்துக்கான தேர்வு இன்று (17-ம் தேதி) முதல் 19-ம் தேதி வரை பல்வேறு பதவிகளுக்கு நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் 11 தேர்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 21 தேர்வு கூடங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 6,686 பேர் எழுத உள்ளனர். தேர்வை கண்காணிக்க 6 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அனைத்துத் தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவதை வீடியோ பதிவு செய்ய 21 வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வர்கள் தங்களது அனுமதிச் சீட்டினை கட்டாயம் எடுத்துவர வேண்டும். தேர்வு மையத்துக்கு 45 நிமிடம் முன்னதாக கட்டாயம் வருகை தரவேண்டும். அதன்பிறகு வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும், விடைகளை குறிக்கவும், கறுப்பு நிற மை உடைய பந்து முனைப்பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பென்சில், பிற நிற மைப்பேனாக்களை பயன்படுத்தக்கூடாது. மேலும், தேர்வர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.தங்களது உபயோகத்திற்காக சிறிய அளவிலான ஒளிபுகும் தன்மையுடைய பாட்டில்களில் கிருமி நாசினி கொண்டு வரலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சுப்ரமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தமிழரசன் உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.