Published : 17 Apr 2021 03:15 AM
Last Updated : 17 Apr 2021 03:15 AM
புதுக்கோட்டையில் தொடங்கப்பட்ட டாம்ப்கால் அரசு நிறுவனத்தின் 2-வது உற்பத்தி பிரிவில் இருந்து முதல் கட்டமாக கபசுர மற்றும் நிலவேம்பு சூரணம் தயாரிக்கப்பட்டு, பிற மாவட்டங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் நிறுவனமான தமிழ்நாடு மருத்துவத் தாவர பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துகள் கழகம் (டாம்ப்கால்) சென்னையில் இயங்கி வருகிறது. இக்கழகத்தின் மூலம் சித்த மருந்துகளைக் கொண்டு ஹேர்ஆயில், பல்பொடி, டானிக், சூரணம், மூலிகைப் பவுடர், லேகியம், மருந்து மாத்திரைகள் தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்படுகின்றன.
இதன் 2-வது உற்பத்தி பிரிவு புதுக்கோட்டை முத்துலெட்சுமி ரெட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இங்கு, முதல் கட்டமாக கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் சூரணம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவை, தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்றவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையத்தை நேற்று ஆய்வு செய்த ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி கூறியது: இங்குள்ள டாம்ப்கால் மருந்து உற்பத்தி நிலையத்தில் இருந்து தினந்தோறும் தலா 450 கிலோ கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் சூரணம் தயாரிக்கப்பட்டு, புதுக்கோட்டை உள்ளிட்ட 19 தென்மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இங்கு தற்போது, 7,000 கிலோ நிலவேம்பு, 3,000 கிலோ கபசுர குடிநீர் சூரணம் தயார் நிலையில் உள்ளது என்றார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட சுகாதார இணை இயக்குநர் ராமு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் உம்மல் கதீஜா, கோட்டாட்சியர் டெய்சிகுமார், சுகாதார துணை இயக்குநர் கலைவாணி, டாம்ப்கால் சிறப்பு அலுவலர் மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT