முகக்கவசம் அணியாமல் வரும் - பொதுமக்களிடம் அபராதம் விதிக்கும்போது மென்மையான போக்கை கடைபிடியுங்கள் : போலீஸாருக்கு புதுக்கோட்டை எஸ்.பி அறிவுரை

முகக்கவசம் அணியாமல் வரும் -  பொதுமக்களிடம் அபராதம் விதிக்கும்போது மென்மையான போக்கை கடைபிடியுங்கள் :  போலீஸாருக்கு புதுக்கோட்டை எஸ்.பி அறிவுரை
Updated on
1 min read

கரோனா பரவலை தடுப்பதற்காக முகக்கவசம் அணியாதோர் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றாதோர் மீது அபராதம் விதிக்கும்போது அவர்களிடம் மென்மையான போக்கையே கடைபிடிக்க வேண்டும் என போலீஸாருக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் அறிவுறுத்தியுள்ளார்.

கரோனா 2-வது அலை தீவிரமாக பரவிவருவதைத் தொடர்ந்து அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதில், அபராதம் விதிக்கும்போது போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே சில இடங்களில் வாக்குவாதம் ஏற்படுகிறது. போலீஸாரைக் கண்டித்து போராட்டமும் நடத்தப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும்போது மென்மையான போக்கையே கடைபிடிக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் போலீஸாருக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இந்த அறிவுறுத்தல் தொடர்பான அவரது குரல் பதிவானது அனைத்து சமூக வலைதளங்களிலும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர் கூறியிருப்பதாவது:

முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் தனிமனித இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதில், சில சிரமங்களும் ஏற்படுகின்றன.

அபராதம் விதிக்கும்போது ‘உங்களுக்காகவும், உங்கள் குடும்பத்தினரின் உயிருக்காகவும், நண்பர்களின் உயிருக்காகவுமே அபராதம் விதிக்கப்படுகிறது’ எனக் கூறி தெளிவுபடுத்த வேண்டும். அப்போது, சிலர் ஏற்றுக்கொண்டு சென்றுவிடுவார்கள். ஆனால், வாக்குவாதம் செய்வோரிடம் மீண்டும் மென்மையாக கூறி புரியவையுங்கள்.

மாறாக, பொதுமக்களிடம் போலீஸார் எதிர்த்து பேசத் தேவையில்லை. அதை வீடியோவாக பதிவு செய்துவிட்டு. அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுங்கள். நமது நோக்கம் கரோனாவை கட்டுப்படுத்துவது மட்டுமே தவிர, பொதுமக்களை தண்டிப்பதுஅல்ல. அனைத்து போலீஸாரும் இதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in