

கரோனா தடுப்பூசி குறித்து பரவும்வதந்திகளை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.
திருப்பூர் மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி மையத்தையும், அவிநாசிசாலையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமான டிஎஸ்கே மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசி மையத்தையும் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது கரோனா தடுப்பூசி மருந்து போதிய அளவில் கையிருப்பு உள்ளதா என்பதை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார். அதன்பின்பு ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் கரோனாதடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெயரைப் பதிவு செய்து, ஆதார் அட்டையை காண்பித்துவிட்டு தடுப்பூசி போட்டுகொள்ளலாம். அதன்பின்னர் காத்திருப்பு அறையில் கண்காணிக்கப்பட்டு, பிறகு வீட்டுக்கு செல்லலாம். முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நாளொன்றுக்கு 5,000 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்பாமல், தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும். முதல் டோஸ் தடுப்பூசி போட்டபிறகு 6- 8 வார இடைவெளியில் மீண்டும் அடுத்த டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டபிறகும், முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை சோப்பால் கழுவுவது போன்ற கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்போது மாநகராட்சி ஆணையர் க.சிவக்குமார், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜெகதீஷ்குமார், நகர்நல அலுவலர் பிரதீப் கிருஷ்ணகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
மாணவர்கள் விழிப்புணர்வு
நிகழ்வை, மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர் முருகன் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் அலகு- 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.