

நெடுங்கல் அணையில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரையை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே நெடுங்கல்லில் சிறு அணை கட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கடந்த 1887-88-ல் கட்டப்பட்ட இந்த அணையின் மொத்த நீளம் 912 அடி. நீர்மட்டம் 8.97 அடி. கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரி நீர் ஆற்றின் வழியாக நெடுங்கல் அணை வழியாக செல்கிறது. மேலும் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள அணை வழியாக 2 பிரதான கால்வாய்கள் உள்ளன. ஒன்றின் மூலம் மோட்டூர், ஆவத்துவாடி, நெடுங்கல், அகரம், தேவீரஅள்ளி, பண்ணந்தூர் செல்கிறது. மற்றொரு கால்வாயில் செல்லும் தண்ணீர் பேரூஅள்ளி, காவப்பட்டி, செல்லம்பட்டி, விளங்காமுடி, புங்கம்பட்டி கிராமங்களில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறுவதுடன், பாரூர் ஏரிக்கும் நீர் செல்கிறது. தற்போது, கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2-ம் போக சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றில் மிகவும் குறைந்த அளவே தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தண்ணீர் நெடுங்கல் அணையை வந்தடைகிறது.
தற்போது நெடுங்கல் அணை முழுவதும் ஆகாயத்தாமரை படர்ந் துள்ளது.
இதுதொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, தென்பெண்ணையாற்றில் ஆகாயத்தாமரை நீரில் அதிகம் படர்ந்துள்ளது. இதனால் நீரின் ஓட்டம் பாதிக்கப்படுகிறது. எனவே, நெடுங்கல் அணையில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.