

சேலம் மாநகராட்சி பகுதியில் தினசரி குப்பைக் கழுவுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 கோட்டங்களில் 8.60 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சேலத்துக்கு தினசரி வெளிமாநிலம், பிற மாவட்டங்களில் இருந்து 2 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய சாலைகளில் இரண்டு, மூன்று குப்பை தொட்டிகளை அடுத்தடுத்து மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், குப்பைத் தொட்டிகளில் கழிவுகள் நிரம்பி சாலைகளில் குவியும் நிலையுள்ளது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையுள்ளது.
நகரில் சிறிய சந்துகளில் குப்பை தொட்டிகள் வைத்தால், மாநகராட்சி குப்பை அள்ளும் வாகனங்கள் வந்து எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால், பிரதானச் சாலைகளில் மூன்று குப்பை தொட்டிகள் வரை மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், குப்பைத் தொட்டிகளில் சேரும் கழுவுகளை தினசரி அகற்றுவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சேலம் சின்னதிருப்பதி பேருந்து நிறுத்தம், அம்மாப்பேட்டை, திருவிக சாலை, செவ்வாய்பேட்டை வாசக சாலை சந்திப்பு என மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு அடுத்தடுத்து வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் கழிவுகள் நிரம்பி வருகிறது.
மேலும், கழிவுகளை கால்நடைகள் கிளறி சாலை முழுவதும் கழிவுகள் பரந்து தூர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, குப்பைத் தொட்டிகளில் தேங்கும் கழிவுகளை தினசரி அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.