

சேலம் திப்பம்பட்டி கிராமத்தில் இயற்கை விவசாயம் தொடர்பாக விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதுதொடர்பாக சேலம் வேளாண் துறை உதவி இயக்குநர் வேலு கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த 11 மாணவிகள் சேலம் சந்தியூரில் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் 75 நாட்கள் தங்கி, கிராமங்களில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கைமுறை, சமூகக் கலாச்சார முறைகள், விவசாய யுக்திகள், விவசாய பிரச்சினைகள் மற்றும் அதற்கு தீர்வு காணும் வழிமுறைகள் பற்றி நேரடியாகக் கண்டறிந்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் திப்பம்பட்டி கிராமத்தில் இயற்கை விவசாயம், விதைநேர்த்தி மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை வேளாண் கல்லூரி மாணவிகள் ஏற்படுத்தினர். விதைநேர்த்தி என்பது விதையை எடுத்துக் கொண்டு அதனை உயிர் உரமான டிரைக்கோடெர்மா விரிடியுடன் கலந்து அதன் பிறகு அரிசி கஞ்சியுடன் சேர்த்து நிழலில் 24 மணி நேரம் உலர்த்த வேண்டும். பின்னர் வயலில் விதைக்க வேண்டும். இதனால், வாடல் நோய், வேர் அழுகல் நோய் போன்றவற்றை கட்டுபடுத்தலாம். அதிக மகசூல் பெறலாம் .
பெருமளவு உபயோகிக்கப்படும் செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகள், ஹார்மோன்கள் மற்றும் தீவனச் சேர்க்கைகள் போன்ற செயற்கை இடுபொருட்களை இயற்கை விவசாயத்தில் தவிர்க்க வேண்டும்.
பயிர் சுழற்சி, பயிர் கழிவுகள், கால்நடைகளின் எருக்கள், பண்ணைக்கு வெளியே கிடைக்கும் அங்ககக் கழிவுகள், கனிமப் பாறை சேர்க்கைகள், உயிரியல் அமைப்பு சார்ந்த பயிர் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பெயர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிச் செய்வதே அங்கக விவசாயமாகும்.
இயற்கை விவசாயத்தில் பூச்சியைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர அழிக்க முடியாது. அதனால் பயிர் சுழற்சி, பசுந்தாள் உரம், பூச்சி எதிர்ப்பு பயிர்வகைகள் போன்ற வகைகளில் சுற்றுச்சூழலை மாறுபடச் செய்து பூச்சிகளைத் தவிர்க்கலாம்.
இயற்கை பூச்சி எதிரிகளைக் காக்க வயல் ஓரங்களில் புதர்வேலி மற்றும் மரவரிசை அமைக்கலாம். இயற்கை பூச்சித்தடுப்புகளான பூச்சி வேட்டையாடிகள் ஒட்டுண்ணிகள், நோய்க்கிருமிகள் போன்றவற்றை வயலில் சரியான நேரத்தில் விடலாம்.
மேலும், இனக்கவர்ச்சிப்பொறி, பூச்சி ஈர்ப்புகள் மற்றும் இயற்கை பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்தலாம். உழவியல் முறைதான் முதலில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தி இயற்கை பூச்சி எதிரிகளை ஊக்குவிக்கும். நோய்க்கிருமிகளைக் கொண்டு பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறை உயிரியல் பூச்சி மேலாண்மை எனப்படும்.
விவசாயிகள் செயற்கை பூச்சி ஈர்ப்புகளைப் பயன்படுத்தும்போது பூச்சியின் வாழ்க்கை சுழற்சியில் மாறுதல் ஏற்படுத்தி பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.