கடைகள், நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் : ஈரோடு மாநகராட்சி அறிவிப்பு

கடைகள், நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் :  ஈரோடு மாநகராட்சி அறிவிப்பு
Updated on
1 min read

ஈரோட்டில் செயல்படும் கடைகள், நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஈரோடு நகரில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன். இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த சுற்றறிக்கை, மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

கடைகளில் உள்ள அனைத்து பணியாளர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து இருந்தால் மட்டுமே கடைக்குள் அனுமதிக்க வேண்டும்.

கடையின் நுழைவு பகுதியில் கிருமிநாசினி, சோப்பு திரவம், தண்ணீர் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்து, கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்பே வாடிக்கையாளரை உள்ளே அனுமதிக்க வேண்டும். கடையின் உட்புறமோ அல்லது வெளியிலோ கூட்டம் சேர அனுமதிக்கக் கூடாது.

கடையின் அளவிற்கு ஏற்றவாறு, வாடிக்கையாளர்களை 6 அடி தூர சமூக இடைவெளியுடன், குறைந்த எண்ணிக்கையில் அனுமதிக்க வேண்டும். டீ,காபி, குளிர்பானங்கள் கண்டிப்பாக ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பேப்பர் டம்ளரில் மட்டுமே வழங்க வேண்டும். சில்வர் மற்றும் கண்ணாடி டம்ளர்களை பயன்படுத்தக் கூடாது. பலகாரங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கும் போது கண்டிப்பாக கையுறை அணிந்திருக்க வேண்டும்.

அதிகாரிகள் ஆய்வின் போது, இந்த வழிமுறைகளை மீறுபவர்களுக்கு, உடனடியாக ரூ.500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் கரோனா வழிமுறைகளை பின்பற்றாத கடைகளை, மூடி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in