திருப்பூரில் தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு போதிய அளவில் - நகரப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி பயணிகள் சாலை மறியல் :

திருப்பூரில் தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு போதிய அளவில்   -  நகரப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி பயணிகள் சாலை மறியல்  :
Updated on
1 min read

தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு இடையே போதிய அளவில் நகர பேருந்துகளை இயக்க வலியுறுத்தி, திருப்பூர் கோவில்வழி பேருந்து நிலையம் முன்பு பயணிகள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தை இடித்து, ‘ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியும், அருகில் அடுக்குமாடி வாகன நிறுத்தகம் கட்டும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பழைய பேருந்து நிலையம் இடிக்கப்பட்டதால் யுனிவர்சல் திரையரங்கம் அருகிலும், ஆட்சியர் அலுவலகம் அருகே கோவில்வழி பகுதியிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கோவில்வழி பகுதியிலிருந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல போதுமான நகரப் பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்கு ஆளாகி வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை வெளியூரில் இருந்து திருப்பூர் வந்த பயணிகள் 50-க்கும் மேற்பட்டோர், போதிய நகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை எனக் கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு நல்லூர் போலீஸார் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவர்கள் வெளியூரில் இருந்து வருபவர்களை கோவில்வழி பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுச் செல்கின்றனர். ஆனால், கோவில்வழியில் இருந்து திருப்பூர் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் மற்ற பகுதிகளுக்கு செல்ல போதுமான நகரப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என, போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் தற்காலிக பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து பயணிகள் கலைந்து சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in