

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தலித் இளைஞர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் திருப்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பூர் குமரன் பூங்கா முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் விடுதலை கழகத்தின் மாவட்ட தலைவர் முகில்ராசு தலைமை வகித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் குமார், ஜனநாயக மாதர் சங்கத்தின் மைதிலி உட்பட பலர் பங்கேற்றனர்.
தலித் இளைஞர்கள் படுகொலையில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, அரசு வேலை வழங்க வேண்டும். இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள 6 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.