Published : 12 Apr 2021 03:20 AM
Last Updated : 12 Apr 2021 03:20 AM

உரம் விலை உயர்வுக்கு பாஜக அரசே காரணம் : இந்திய விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை

50 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை டிஏபி உரம் ரூ.1,200-ல் இருந்து ரூ.1,900 என விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, காம்ப்ளக்ஸ் உரங் களின் விலையும் உயர்த்தப் பட்டுள்ளது. உரங்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புதுக்கோட்டை ஜி.எஸ்.தனபதி தெரிவித்துள்ளது: பயிர் சாகுபடிக்குத் தேவைப்படும் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து என்ற 3 வகையான உரங் களில், முதல் 2 வகை உரங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப் படுகின்றன. சாம்பல் சத்து எனப்படும் பொட்டாஷ் உரம் மட்டும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

உரங்களின் விலையைக் கட்டுப்படுத்தி வந்த மத்திய அரசு, அவற்றின் விலையைத் தீர்மானிக்கும் உரிமையை உரம் உற்பத்தி செய்யும் நிறுவனங் களிடம் ஒப்படைத்து விட்டது. இதனால், அவை விலையை தாறுமாறாக உயர்த்தி வருகின்றன.

உரத் தயாரிப்பில் மூலப் பொருளாக இருக்கும் பாஸ்பாரிக் ஆசிட் விலை, பன்னாட்டுச் சந்தையில் உயர்ந்ததால், டிஏபி, காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களின் விலை உயர்ந்து வருவதாக உரத் தயாரிப்பு நிறுவனம் கூறி இருக்கிறது.

ஆனால், உண்மை அதுவல்ல. மத்திய பாஜக அரசு உர உற்பத்திக்கு அளித்து வந்த மானியத்தை குறைத்துவிட்டதால்தான், உரம் விலையை உற்பத்தி நிறுவனங்கள் உயர்த்திவிட்டன.

கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், உர மானியத்துக்கு ரூ.1,33,947 கோடி வழங்கப்பட்டது. ஆனால், நிகழாண்டு ரூ.79,530 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டு உள்ளது. உர மானியத்தில் ரூ.54,417 கோடி குறைக்கப்பட்டதால்தான், ரசாயன உரங்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

ஆனால், விவசாயிகளின் விளைபொருளுக்கு இதுவரை எந்தவிதமான உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. ஒருபைசா கூட விலையும் உயர்த்தப்பட வில்லை. உரத்தின் விலையை மட்டும் உயர்த்தி இருப்பதால் விவசாயமும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறி யாகும்.

இதுபோன்று, விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதையே மத்திய பாஜக அரசு வாடிக்கையாக கொண்டு இருக்கிறது. உர விலையை உயர்த்தி இருப்பது கண்டனத்துக்கு உரியது. உரங்களின் விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும். விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசு, விலையைக் குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x