

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. கல்லூரி டீன் ரத்தினவேல் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜேந்திரன் ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.
பிறகு மாவட்ட ஆட்சியர் பேசுகையில், மருத்துவப் பணி இக்காலக்கட்டத்தில் சவாலான பணியாக மாறியுள்ளது. அப்பணியை மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் பணிக்குச் செல்லும் மருத்துவர்கள் நோயாளிகளை தன்மையுடன் நடத்தினாலே பாதி நோய் குணமாகிவிடும். உலகளவில் மருத்துவத் துறையில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இளம் மருத்துவர்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும், என்று பேசினார்.
உதவி முதல்வர் சர்மிளா திலகவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் 2015-ம் ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 100 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.