Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் - வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு :

திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையத்தில் ‘ஸ்ட்ராங் ரூம்’ எனப்படும் அறையில் பலத்த பாதுகாப்புடன் நேற்று வைக்கப்பட்டன.

திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை என 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடந்த 6-ம்தேதி தேர்தல் நாளன்று பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருப்பூர்- பல்லடம் சாலை எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் நேற்று காலை அதிகாரிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க.விஜயகார்த்திகேயன் தலைமையில், தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் ரவிசங்கர பிரசாத், சந்தர் பிரகாஷ் வர்மா, உமா நந்தா டோலி, மாஷீர் ஆலம், கபில்மீனா, மற்றும் அரசியல் கட்சியினர் ஆகியோர் முன்னிலையில், ‘ஸ்ட்ராங் ரூம்’ எனப்படும் பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன. தொடர்ந்து அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம்மற்றும் வி.வி.பேட் ஆகிய இயந்திரங்கள் தனித்தனி அறைகளில் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டன. மாநகரக் காவல் ஆணையர் கார்த்திகேயன், காவல்கண்காணிப்பாளர் திஷா மித்தல்,வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மூன்றடுக்கு பாதுகாப்பு

‘ஸ்ட்ராங் ரூம்’ முன்பும், ஒவ்வொரு தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட கட்டிடம் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தை சுற்றியும் உயர் கோபுரங்கள் அமைத்து மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில், மத்திய காவல் படை, காவல் துறையினர் 24 மணிநேரப் பாதுகாப்பில்சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர். வளாகத்துக்குள் 180 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டத்துக்குட்பட்ட உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் பார்வையாளர் பனுதர் பஹெரா, மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ஜெ.இன்னசென்ட் திவ்யா, காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் முன்னிலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, அறைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த அறையைசுற்றிலும் மத்தியதொழில் பாதுகாப்புப் படையினர், அறைகளுக்கு வெளியே தமிழ்நாடுசிறப்புக் காவல்படை, வெளியில் உள்ளூர் காவல் துறையினர் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 102 கண்காணிப்புக்கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள்ஈடுபட்டுள்ளனர். மத்திய போலீஸார் மற்றும் மாநில போலீஸார் என மொத்தம் 308 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x