Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

ஏரியூர் அருகே நடமாடிய ஒற்றை யானை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை :

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே கிராம மக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை யானை மயக்க ஊசி செலுத்தி வாகனத்தில் ஏற்றப்பட்டது. அடுத்தபடம்: வனத்துறையினர் யானையை பிடிக்கும் தகவல் அறிந்து அப்பகுதியில் திரண்ட சுற்று வட்டார கிராம மக்கள்.

தருமபுரி

தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே கிராம மக்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை யானைக்கு மயக்க ஊசி செலுத்தி அடர்வனப் பகுதிக்கு வனத்துறையினர் பிடித்துச் சென்றனர்.

பென்னாகரம் வனச் சரகம் ஏரியூர் பகுதியில் பதனவாடி காப்புக்காடு உள்ளது. காவிரி ஆற்றை ஒட்டிய இப்பகுதியில் கடந்த 2 வாரங்களாக ஒற்றை ஆண் யானை ஒன்று விளைநிலங்களில் நடமாடி வந்தது. இந்த யானை பதனவாடி காப்புக்காட்டை ஒட்டி யுள்ள கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்திருக்கலாம் என வனத் துறையினர் தெரிவித்து வந்தனர்.

சுமார் 20 வயதுடைய இந்த யானை ஏரியூர் அருகிலுள்ள ஒட்டனூர், முத்தரையன் கோயில் உள்ளிட்ட பகுதி களில் முகாமிட்டிருந்தது. இரவு நேரங்களில் விளைநிலங் களுக்குள் நுழைந்து ராகி, மா, வாழை போன்ற பயிர்களை சேதம் செய்து வந்தது. இதுவரை 3 மாடுகளை தாக்கியதுடன், இருசக்கர வாகனம் ஒன்றையும் தூக்கி வீசி சேதப்படுத்தியது. யானையின் இந்த செயல்பாடுகளால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சமடைந்தனர். யானையை வனத்துக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை வைத்தனர்.

அதைத்தொடர்ந்து, வனத்துறை யினர் வெடி வெடிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் யானையை வனத்துக்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு காவிரி ஆற்றை கடக்கச் செய்து கருங்காலி மேடு வரை யானையை இடம்பெயரச் செய்தனர். ஆனாலும், மீண்டும் யானை ஒட்டனூர் பகுதிக்கே வந்து சேர்ந்தது. இதுதவிர, யானையில் உடலில் ஆரோக்கிய குறைபாடு இருப்பதும் தெரிய வந்தது. எனவே, வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான குழுவும், வனத்துறை குழுவும் இணைந்து யானையை தொடர்ந்து கண்காணித்தனர். பின்னர் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்துச் சென்று அடர்ந்த காட்டுக்குள் விடுவிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக வனத்துறை உயர் அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை வனம் மற்றும் கால்நடைத் துறையினர் நேற்று ஒட்டனூர் பகுதியில் முகாம் அமைத்தனர். இருளச்சி கிணறு என்ற வனப்பகுதியில் நின்றிருந்த அந்த யானைக்கு காலை 8 மணியளவில் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. 2 முதல் 4 மணி நேரத்தில் யானை மயக்க நிலைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. சுமார் 3 மணி நேரத்தில் அதாவது 11 மணியளவில் யானை மயக்க நிலைக்கு செல்லத் தொடங்கியது. எனவே, ஏற்கெனவே தயாராக இருந்த கிரேன், பொக்லைன் வாகனங்கள் மூலம் யானை பிரத்யேக வாகனத்துக்குள் ஏற்றப்பட்டது. அதன் பின்னர் யானையை அடர் வனப்பகுதியில் விடுவிக்க அந்த வாகனம் புறப்பட்டு சென்றது.

கிராம மக்களை அச்சுறுத்திய ஒற்றை யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் தகவல் பரவியதால் சுற்று வட்டார கிராமங் களை சேர்ந்த மக்கள் வேடிக்கை பார்ப்பதற்காக அப்பகுதியில் ஏராளமாக திரண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x